4 சாத்தான்களோடு நெருக்கமாகவும்
கடவுள்களை
மிக நீண்டதூரத்திலும்
நிறுத்தி
சுழல்கிறது
இம்மாய இணைய உலகு
5
ஒரு சொல்
வாழ்வை
உறையச் செய்துவிடுகிறது
சுழன்றாடும்சுடரை
ஊதி அணைக்க
அச்சொற்களே
காற்றாக
மாறிவிடுகின்றன
7
நீங்கள் எதிர்பாராத
ஒரு தருணத்தில்
உங்களை
மலரச் செய்வதுதான்
பூக்களின் இயல்பு...
8
விளையாட்டை
விளையாட்டாகவே
கடந்துவிடும்
பக்குவம்
குழந்தைகளுக்கே உரித்தானது
விளையாட்டைவினையாக்குவதும்
பெரும் விலையாக்குவதும்
பெரியோர் செய்யும்
பெருந்தீங்காகும்....
9
ஒரு கேள்வி
எல்லோருக்குமான பதிலை தந்திருக்கிறது
அதிகாரத்தின்
செவிகளில்
எட்டிய கூக்குரலில்
ஒரு இனத்தின்
கண்ணீரே
துடைத்தெறியப்பட்டிருக்கின்றது
ஆராய்ச்சி மணிகள்
எழுப்பிய சத்தம்
ஒரு அரசாங்கத்தை தூங்கவிடாமல்
நீதி வழங்க செய்திருக்கின்றது....
10
பின்புலத்தின்
வெளிச்சத்திலிருந்து
கவனம் பெறுகின்றன
ஒரு சில பூக்கள்
11
மதங்கொண்ட
யானைகளாய்
மக்கள்
மாறத்துவங்கினால்
காடுவெட்டிகளை
நாடு வெட்டத் துவங்கிவிடும்...
12
அணைந்து
விடக்கூடாது எனும்
விரல்களின்
பெருந்தவிப்பும்
அணைத்தே தீர்ப்பது எனும்
பெருங்காற்றின்
உதடுகளுக்கும்
இடையே
ஊடாடிக் கிடப்பதுதான்
வாழ்வெனும் பெருந்துயரம்...
15
மேகங்களுக்கு
கிறுக்கு பிடித்தாற்போன்று
திடீர் திடீரென
பெருமழை பெய்து
நகர வீதிகளை
குளக்கரை
ஆக்கிவிடுகின்றது
அதில் மல்லாந்து படுத்துக்கொண்டு
காகித கப்பல்களும்
குழந்தைகளுடன்
கும்மாளமிடுகின்றது....
17
நீரால்
ஒரு நகரம்
முற்றுகையிடப்படும்போது
நாடாண்ட மன்னர்களால்
அந்நிலம்
சூறையாடப்பட்டது
அம்பலமாகின்றது...
18
இரவெலாம்
மழையின் நடனம்
குளிர்ந்த தேகம்
தனை மறந்து தாளமிடுகிறது
ஒரு கோப்பை
குளிர்ந்த இரவை
கதகதப்பாக்கலாம்...
19
அரும்பிலிருந்து
சருகாய் உதிரும்
வாழ்விற்கு
மலர்வளையம் தயாரிப்பதே
மானுடத்தின் பேரியல்பு
20
எலிகளின் உலகத்தில்
பூனைகளே
சிறப்பு
விருந்தினர்
21
சிட்டுக்குருவிகளின்
சிறகை நனைத்து
விட்டு
ஆகாயம்
அழுதுகொண்டிருக்கிறது
ஈரமற்று
22
முரட்டுப்பாறைகளையும்
முட்டி எறிந்து
துளிர்ப்பதொன்றுதான்
வீரிய விதைகளின்
போர்க்குணம்...
23
கூழாங்கற்களால்
கட்டி எழுப்பப்பட்ட
கோபுரமொன்று
சிறு காற்றிற்கு
உருக்குலைந்து
விடுவது
போன்றதுதான்
நொடிப்பொழுதில்
சிதைந்துவிடுகிறது
அன்பற்ற கொடுஞ்சொல்லால்
சிலர் வாழ்வு...
24
அலையாடுகின்ற
கடலில்
மலைமுகடின் நுனியில்
அமர்ந்தெழுகின்ற தவம்
புத்தனுக்கும்
கிட்டாத
ஓர் வரம்...
25
கடலலைகளின்
ஏக்கப் பெருமூச்சு
வெண்சங்கின்
இசையாய்
வழிந்தோடுகிறது
ஆழ்கடலின்
துயரங்களை
உள்வாங்கிபாடுவதற்கு
சங்கநாதமே சாட்சி...
26
சொக்கப்பனை கொளுத்தி
ஊர் குளிர்காய்கிறது
சுட்டியிலிட்ட
சுடர் யாவும்
வாடை தாங்காமல்
காற்றில் நடுநடுங்கி
சுழன்றாடுகிறது
ஒளிவீசிய தீபங்கள்
யாவும்
காரிருள் பரப்பி
ஆழ்துயில்கொள்கின்றன...
27
வெண்ணிறவு வேளைகளில்
ஊர் சுற்றியலையும்
சுடலைமாடசாமிகளின்
கோடங்கி சத்தம்
உலகையே தின்று
செரித்து
குளிர்சாதன அறைகளில்
பிணம்போல்
உறங்குவோரை
ஒருபோதும் எழுப்பியதில்லை...
28
யானைகளின்
வழித்தடமெங்கும்
எறும்புகளின் சமாதிகள்
29
ஒற்றை
காலடித்தடமே
புத்துலகை
வரைந்தளிக்கின்றது
உலகே பின் தொடரினும்
குருதி வழிய நடந்த
முதலடியே மேன்மையானது
30
வெள்ளை நிறத்திலோர்
கோலமிடுவாள் அன்னை
அச்சிட்ட பூக்களாய்
தெருக்களை அலங்கரிக்கும்
கல்வி வாசனையறியாத
விரல்களில் வழியும்
புள்ளிகளும்
கோடுகளும்
அதை
இணைக்கும்லாவகமும்
அவள் கற்றிருந்த
காலக்கணிதத்தை
கண்முன் நிறுத்தும்
வாழ்வு வண்ணமற்றிருந்தாலும்
விதவிதமான
வெண்ணிறக்
கோலங்களிலே
வெந்து திருநீறானாள்
31
நீங்கள்
எங்கிருந்து
வேண்டுமானாலும்
துவங்கி
கொள்ளுங்கள்
உங்கள் நாடகங்களை
நீங்கள் நடித்து பழகுவதற்காக
திறந்தவெளி
மைதானமாய்
எங்கள் மார்புகள்
உங்கள் துப்பாக்கி ரவைகளை
ஏந்துவதற்கு
காத்திருக்கின்றன
திரைச்சீலைகளை துவக்கியதிலிருந்து
பிணங்களாகவே வந்து விழுகின்றன
நாடகம் முடிந்தபின்
உங்களுக்கான முடிவுரையை
பார்வையாளர்கள்
எழுதிச் செல்வார்கள்
சர்வாதிகாரிகளின்
மரணக்குறிப்புகளைப்
போல...
32
விளையாட
நிலவைகையில்
கொடுத்தால்
அது நீருக்கடியில்
ஒளித்து வைக்க
முயற்சி செய்கிறது
காரிருளின் அறியாமையை
பரிகாசம் செய்தபடி
நீருக்குள் துள்ளியோடுகிறது
மீன் கூட்டமொன்று...
33
வெட்டி வீழ்த்தப்பட்ட
துளிர்க்கவியலாத
மரக்கிளைகளில் கூட
கணநேரமேனும்
வசந்தங்கள்
வந்தமர்ந்து
போகின்றன
மீண்டுமொரு
வனம் துளிர்க்க
சிறகுகளின் ஆசிர்வதம்...
34
பகலெலாம்
ஓடோடிய ஊர்
உறங்கச்
சென்றுவிட்டது
நடந்துபோன
ஊரின் நடத்தையை
வெளிச்சம்போட்டு
காட்டிக்கொண்டிருக்கிறது
இரவுப் பனியில் நனைந்தபடி
மின்விளக்குகள்...
35
வனமிழந்த கோபமோ?
மண்வாரித்
தூற்றுகிறதே
அடர்காட்டின் ஆதிமகன்...
36
நிமிர்ந்தே
நிற்க
பழகியவர்களின்
வளைவுகளற்றவாழ்வு
வனப்பிற்குரியது
வளமற்றதெனினும்
நடுங்காததால்
நலமுற்றது...
37
நதிகள்
சொல்லிப் போன
ரகசியங்கள் யாவும்
அடைகாத்து வைத்திருக்கின்றன
கூர்மை இழந்த
கூழாங்கற்கள்
அவை பேசத் துவங்கினால்
உலகம் ஒருநாள்
வாயடைத்து நிற்கக்கூடும்...
38
மார்கழிப்பனியில்
நனைந்தொலிக்கும்
ஆலயக் குயில்கள்
அதிகாலைப்பொழுதுகளை
ரம்யமாக்குகின்றன
பக்தியற்ற மனங்களை
கூட
இசை ஈஸ்வரிகள் செவிவழியே
அம்மன்களை
இதயத்திற்குள்
நுழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இசைக்கேதுபக்தி...
39
நீங்கள்
எங்கிருந்து
வேண்டுமானாலும்
துவங்கி கொள்ளலாம்
பிரபஞ்ச சுழற்சியில்
கணிதமெலாம் ஓர்
காலப்பிழை
நீள்வட்டப்பாதையில்
உலகம் சுழன்றோடும்
காலத்தை மெல்ல நகைத்தபடி...
40
காலம் எழுதும்
சுருக்கெழுத்திலிருக்கின்றது
நீங்கள்
வாழ்ந்ததற்கான
முகவரி
41
முகநூல்
சிறை புகுவதும்
சிறு பறவையென
திறந்தவெளியில்
சுற்றித்திரிவதும்
வலைதளப் பூட்டின்
சாவிகள் யாவும்
அவரவர் அறிவு வசமே உள்ளது
நேரக்
கட்டுப்பாடுடையோர்
வாழ்வை காப்பர்
42
உலகை
வேடிக்கை பார்ப்பது கூட
சுவாராசியமாய் தான் இருக்கிறது
தொடு வானங்கள்
கானல்நீர் கனவுகளாய்
நீர்த்துப்போகையில்
வேறு என்னதான் செய்வார்கள்
வாழ்வற்ற ஏதிலிகள்
43
குறுக்கும்
நெடுக்குமாக
வளைவும் நெளிவுமாக
எத்தனையோ பாதைகள்
மறைந்து கிடக்கின்றன
சிகரம் தொடுவோர்க்கு மட்டுமே
அப்பாதைகள்
புலானாவதன்
சூட்சுமம் மட்டும்
தெரிவதேயில்லை...
44
பசித்தீயில்
கருகிவிடுகின்றன
உலைக்களங்கள்
45
அறியாமை காரிருளில்
கேள்வி கேட்பாரின்றி
காற்றிலாடி ஒளிர்கின்றன
மகர தீபமர்மங்கள்...
46
ஒரு
சொல்லுக்கு பறந்தோடி
வருகின்ற கூட்டம்
சிறு கல்லுக்கு
விரைந்தோடிவிடுகின்றது
சொற்களினும்
கற்களின் வலிமை
ஆகப் பெரிதாகிறது..
47
வீரமென்பது
யாதெனில்
கூரிய கொம்புகளுடன்
போரிடுவதன்று
நேரிய வழிநின்று
சீரிய வாழ்வினை
யாவர்க்கும் தீதின்றி
செம்மையாய்
வாழ்ந்து முடிப்பது...
48
உருமாறும்
ஓவியங்களை
மேகங்கள் வரைய
ஆகாயம் அழித்து
விளையாடுவதை காண
நீங்களொரு வானவில்லாய்
மாறிடவேண்டும்...
49
புலி வேடம்
போட்டாலும்
கழுதைகள் தனை மறந்து
கனைத்து விடுவதால்
அசிங்கப்பட்டு திரிகின்றன. –
50
வாழ்நாள் முழுவதும்
வாடகை வீட்டில்
வசித்துச் சாகின்ற
ஏழைகள் யாவர்க்கும்
தூக்கணாங்குருவியின்
கூடுகள் கூட
கொடுங்கனவுதான்...
51
நிலவின்
ஒளிக்கிரணங்கள்
நடைபயிலும் நள்ளிரவில்
ஓங்கி உயர்ந்த
அடர்வனத்தின் ஊடே
காயப்பட்ட
மரங்களுக்கு
மாமருந்தாய்
ஆரத்தழுவுகின்றன..
52
சொற்கள்
வாதையுடன் இருக்கையில்
கவிதைகள் கூட
கண்ணீர் விடுகின்றன...
53
ஆழ்கடலும்
நீள்வானமும்
தனித்துவிடப்படுவோரின்
துயர் தீர்க்கும் உரையாடலும்
மெளனப்பெருவெளியும்
ஏதிலி மானுடர்க்கு
ஆகச்சிறந்த ஆறுதல்...
54
ஒரு
வெற்றுப் பூக்கூடையை
அழகுபடுத்திவிடுகின்றன
மழலையாய்
சிரிக்கும் மலர்கள்.
55
புடைசூழ வாழ்ந்தவர்
கூட
ஏதேனும் ஒரு சூழலில்
தனித்திருத்தலுக்கு ஆளாகிறார்கள்
வெறுமையை
துரத்திவிட
வானளக்கும் சிட்டுக்குருவிகளும்
வாலாட்டும் நாய்க்குட்டிகளும்
துயர்தீர்க்கும்
அருமருந்தாகின்றன...
56
உரையாடலொன்று
விவாதமாகிப்போன
சொற்களமொன்றில்
அங்கே வழிந்தோடிய ரத்தத்தை
சாத்தான்கள்
நக்கிகொண்டிருந்தன
ஒரு உரையாடல்
கொலை செய்யப்பட்டசபையில்
காயமுற்ற சொற்கள் யாவும்
தேம்பி
அழுதுகொண்டிருந்தன
ஆறுதலின்றி
57
தேவதைகள் கையிலேந்தும்
வெளிச்சத்தில்
புலரும் புன்னகை
வாழ்வின் இருண்மையை
வதை செய்கின்றது
ஒளிப் பூப்போல..
58
ஒற்றை
வார்த்தைகளால்
தூக்கி எறிந்துவிட முடிகின்றது
களிறுகளின் கோபம்
உலகை வதம் செய்யவல்லது
மதங்கொள்ளாதீர் மிருகங்களே...
59
உழைப்பவர் கையில்
சுழலும் உலகம்
பிழைப்பவர் பையில்
சேர்வதில் இருக்கின்றது
சுரண்டலின் சூது...
60
கிடைக்கும்
வாகனமெல்லாம்
ஏறி பயணிப்பீர்கள் என்பதற்காக
உங்களுடன் ஊர்வலம் போக
எளிய மனிதர்கள்
ஒருபோதும்
பச்சோந்திகளாக
நிறம் மாற போவதில்லை...
61
உன்
கால்கொலுசுகளால்
என் மௌனங்கள் உடைபடுகையில்
சபித்திட தோன்றவில்லை
உனைவிடவா
வரங்கள் பெரிதெனக்கு...
62
மெளனம்
யுத்தங்களின்
களமழிக்கும்
பேராயுதம்...
63
ஆற்றில்
குதிக்காதவரை
நீந்தியோடும்
மீன்களை
கரையில் நின்று
கையசைக்க மட்டுமே
முடியும்
64
தோளேறி
வானம் பார்த்தவர்கள்
பறக்கத்துவங்கியபின்
செய்யும் முதல்
வேளை
தோளேற்றியவர்களின்
சிறகு
முறிப்பதுதான்...
65
தேசத்தின் ஆன்மாவை
தெருவினில்
வீசியெறிந்து
இறையாண்மை
கீதமிசைக்கிறார்
ஜால்ரா நாயகர்கள்
அது ஈனஸ்வரமாய்
வழிந்தோடுகிறது
66
அவரவர் காடு
அவரவர்கனி
தின்ற பழத்தின்
தித்திப்பைவிட
நெஞ்சில்
குத்தியமுள்ளே
நினைவிலாடுகிறது
67
அரசூழியஞ்செய்வோரில்
ஆகப் பெரும்பான்மையர்
யாசகம் எடுத்தே பிழைக்கின்றனர்
ஏழைகளின்
குருதி ஊற்றியே
பச்சைநிற கையொப்பமிடுகிறார்
68
கையறுநிலையில்
எரிபொருள்
நிரப்பும்
வாகன ஓட்டிகளின்
வெப்ப பெருமூச்சு
தேசமெங்கும் படர்கின்றது
அரசுகள் எரிந்து
பிடி சாம்பலாகலாம்
69
சாலையோர ஓவியன்
கடவுளை வரைகிறான்
உயிர்பித்த கடவுள்
கையேந்துகிறார்
நிறைகிறது
தூரிகை வயிறு
70
தந்தையின்
அனுபவங்கள்
பாடங்களாகும்போது
படமாகிவிடுகிறார்
71
சம்பல்
பள்ளத்தாக்கு
கொள்ளையர்கள்
போன்றது
நீங்கள் கடக்கும்
சுங்கச்சாவடிகள்
72
காலம்
தன் சிறகுகளை உதிர்த்து
உலகை புதிதாய்
உமிழும்
உதிர்ந்த சிறகுகள்
காலச்சக்கரமேறி
வானில் உறையும்
73
ஒரு
மழைப்பொழுதில்
வந்து
சென்றவானவில்லாய்
தடம்பதிக்காமலேயே
சென்றிருக்கலாம்
74
கைபேசிகளின்
பேச்சொலியில்
மௌனத்தில்
உறைந்துபோயின
தொலைபேசிகள்
75
ஒரு சிறுமழை
போதுமானதாக இருக்கிறது
ஊழல் சாலைகளை அம்பலப்படுத்த
குண்டும் குழியுமாக
சாலையெங்கும்
பெருகியோடுகிறது
76
ஒப்பனையற்ற
வீடுகளும்
முகங்களும்
மிக அழகானவை
77
பூமியிலிருந்து குதித்து
தற்கொலை செய்ய
நினைத்தபோதெலாம்
உனதன்பே
ஈர்ப்புவிசையாய்
பிடித்து
நிறுத்தியிருக்கிறது
78
மழையில்
நனைந்ததற்காக
மாராப்பு சேலை
எடுத்து
துவட்டுகிறாய்
துவட்ட துவட்ட
நனைகிறது மனசு
79
ஒற்றைமுகத்தினுள்
ஓர் நூறுகோடி
முகமூடிகள்
வைத்தலைய விடுகிறது
வாழ்வு
80
ஒரு
தகப்பனின்
சுயசரிதையை
அந்திம காலத்தில்
பேரன்களே
நிறைவு செய்கின்றனர்
81
சேறு படிந்த வாழ்வின்
புன்னகையில்
ஒளிர்கிறது
உலகிற்கு
சோறிடும் அன்னையின்
கைகளில் வழிந்தோடும்
அன்பின் ஈரம்
82
சொற்களை
திருடிகொண்டு
போகிறவர்கள்
மெளனங்களோடு
உரையாட முடியாது
83
நீரருந்தும்
பறவையொன்று
தன் தூரிகையால்
குளத்திலொரு
சித்திரம் வரைகிறது
84
உங்கள்
போர்களின் நீதி கூட
யுத்தத்தில் வீழும்
பிணங்கள் முன்
அநீதியாகும்
ரத்தக்கறைபடிந்த
உங்கள் நியாயங்கள்
கல்லறைகளை
ஒருபோதும்
உயிர்ப்பிப்பதில்லை
85
புடைசூழ
வாழ்ந்தவராயினும்
தனித்திருத்தல்
எனும்
தவத்தினுள் மூழ்கி யோர்க்கு
தனிமையே ஓர் வரம்
86
தொலைதூரத்து
கனவுகளில்
தொலைகிறது காலம்
உறக்கமற்ற கண்கள்
உதிர்ப்பதில்லை
நீர்வழித்தடங்களை
மிச்சமிருக்கும் கனவுகளாவது
வெம்மை
குறையாதிருக்கட்டும்
87
கடிவாளமற்று
கட்டவிழ்த்தப்படும்
குதிரைகளாய்
பாய்ந்தோடும்
சொற்களிலிருந்து
எதிரிகள்
தங்களுக்கான
ஆயுதங்களை
தயாரித்து
கொள்கிறார்கள்...
88
கூழாங்கற்களாய்
வாழ்வின் துன்பங்களை
அடுக்கி நிமிர்கையில்
புத்தன் மிளிர்கிறான்...
89
நிமிர்ந்தெழ
முடியாத
சுமைகளை ஏற்றிவிட்டு
வாழ்வை
கூனலாக்கிவிடுகிறது
காலம்...
90
கடவுள் பொம்மைகளோடு
கடைவிரிக்கும்
மதவியாபாரிகள்
விற்று தீர்க்கும்
பொய்களில் இருந்து
உருவாகிறது
மனிதர்களின்
பேரழிவு...
91
சாத்தான்களை
எழுப்பிவிட்டு
பதுங்குகுழிக்குள்
ஓடி ஒளிகிறார்
கடவுள்
போர்க்களமெங்கும்
வழிந்தோடும் குருதிகளை
நக்கிச்
சுவைக்கின்றன
மிருகங்கள்
92
தலித்தென்றால்
அதிகார துப்பாக்கிகளும்
ஆணவமாய்
உயிர் துப்புகிறது...
93
ஆதித் தொல்குடி
சமூகத்தின்
மோப்ப மின்னும்
தீரவில்லை
மூதாதையர்களை தேடி
காடுகளுக்குள்
பயணிக்கின்றன
வாழ்ந்து மடிந்து
தெய்வமானவர்களால்
சிவக்கின்றன
ராத்திரிகள்...
94
அப்பாவின் கனவுகள்
பரணில்
தூசு படிந்து கிடந்தன
துடைத்ததில்
ஒளிர்ந்த
என் முகம் கண்டு
மகன் சிரிக்கின்றான்..
95
நாட்டின்
சொத்துக்களை
விற்று சூறையாடும்
கள்ளத் தரகர்களுக்கு
எங்கள் நாட்டில்
நிதி மந்திரிகள்
என்று பெயர்...
96
சூதாடிகளிடம்
நாட்டை
கொடுத்தார்கள்
அவர்கள்
தேசத்தையே
திருவோடாக்குகிறார்கள்
97
பட்டியிலிருந்து
தப்பிய ஆடுகள்
கசாப்பு கடைக்கு
போக வேண்டும் என்பதில்லை
சிறுகாட்டை கூட
உருவாக்கலாம்
98
நடமாடும்
அடர்வனத்தின்
தலையில் இட்ட
தீயின் பிளிறல்
இரவுகளை கொலை செய்கிறது
99
உழவனின்
கோவணத்தை உருவி
முதலாளிகளுக்கு
தலைப்பாகை
கட்டுகிறது
அரசு...
100
புதிர் மிகுந்த
வாழ்வை
வாழ்ந்து
முடிக்கையில்
யாராலும்
புரிந்துகொள்ள
முடியாத
சித்திரத்தை
கையில் தருகிறது காலம்...
101
தனிமையின்
மரத்தடியில் கிடைப்பதில்லை
வாழ்வின் நெருக்கடிகளில்
கிடைக்கிறது ஞானம்...
102
நள்ளிரவில்
ஒளிரும்
கைபேசி வெளிச்சங்களால்
இருளாகிறது வாழ்வு...
103
மாமன்னர்
ஏற்றி மகிழ்ந்த
காற்றிலாடும்
தேசியக்கொடியின்
கயிற்றிலாடுகிறது
உழவன் வாழ்வு...
104
ஒரு
கதைசொல்லி
வரைந்து காட்டும்
வார்த்தைகளில்
உயிர்பெறுகிறது
வாழ்வு...
105
என்று தீரும்
கொதிக்கும் உலையிலிருந்து
பொங்கிவழியும்
உழவனின்
கண்ணீரை சுவைத்து மகிழும்
பேயரசனின் பெரும்பசி ...
106
குளத்தின்
ஆழ்துயிலை
சிறு கல்லால்
கலைத்துவிட்டு
வேலைக்கு செல்கிறான்
சிறுவனொருவன்...
107
நடை மறந்து
போகிறார்கள்
வழிகாட்டி
மனிதர்கள்
108
ஒரு அரசாங்கம்
பொதுமக்களிடம்
நூதனமாக திருடுவதை
நீங்கள்
எரிபொருள்
நிரப்புகையில்
காணலாம்...
109
சதுரங்கத்தில்
மாயக்கரமொன்று
உலவுவதை
வெட்டுப்பட்ட
ராணியும்
இனி பலியாகப் போகும்
படைகளும் அறியும்...
110
மதுபான விடுதிகளில்
ஊற்றிகொடுத்துவிட்டு
சாலைகளில்
வாயை ஊதச் சொல்லி
வழிப்பறி செய்கிறது அரசு...
111
கோப்பையின்
வெற்றிடத்தில்
எதை நிறைக்கிறோம்
என்பதில் இருக்கிறது
வாழ்வின் பொருள்...
112
தேசம் நோயுற்றபோது
கருவூலத்தின்
கதவை சாத்தியவர்கள்
தேர்தல்காலத்தில்
ரெயில்
திருடர்களாய்
மயக்கமிட்டாய் தருகிறார்கள்...
113
எலிகளிடமிருந்து
தானியங்களை
பாதுகாக்க
பூனைகளை
நியமித்தால்
அது கள்ளச்சந்தையை
திறந்துவைத்து
வணிகம் செய்வதிலேயே
குறியாய் இருக்கிறத
|114
வானமே கூரையாய்
வாழுகின்ற ஏழைக்கு
நள்ளிரவு மழை
ஒரு நரகம்
எல்லோருக்குமான மழையை
எல்லோராலும்
ரசிக்க இயலாது...
115
உணவு தந்த
உழவனுக்கு
பேரரசன் நீட்டும்
நஞ்சுக்கோப்பைகளால்
விவசாயியின் வாழ்வு
ஊசலாடுகிறது...
116
காலத்தின்
பிரக்ஞையின்றி
சுழல்கிறது பிரபஞ்சம்
உலகம்
காலண்டர்கள்
தயாரித்து
கூத்தாடுகிறது...
117
நிலவற்ற இரவுகளில்
உலா வருகின்றாய்
ஒளிர்கிறது இருள்
118
வன்முறைகள் குறித்தான
நீங்கள் வரையும்
ஓவியத்தில்
புலிகளின் படுகொலைகளில்
தெறித்து விழுந்த
ரத்த துளிகளின்
வண்ணங்கள் குழைத்தே
வரைவதொன்றுதான்
சித்திரத்தை முழுமையாக்கும்..
119
வாழ்வை கடப்பதற்கான
சூட்சுமங்களனைத்தும்
கயிற்றின்மேல் நடக்கும்
கழைக்கூத்தாடி
சிறுமியின்
கண்களில்
ஒளிர்கின்றது...
120
சுவைகளை
இழந்த நாக்குகளை
வழங்கிவிடுகிறது நோய்மை
பரம்பரை
சொத்துக்கள்
இருக்கிறதோ இல்லையோ
மரபுவழி நோய்கள்
பிரிவினை ஏதுமின்றி
முழுதாய் கிடைக்கின்றன...
121
மூங்கில் காடுகளில்
கசிகின்ற காற்றிலும்
குழலின் கீதம்...
122
இடுப்பில் சொருகும்
சுருக்குப்பைகளே
அம்மாவின் கஜானாக்களாக இருந்தன
கருவறையின்
கருவூலத்திலிருந்து
வற்றாத ஜீவநதிகளாய்
பொற்காசுகள் கொட்டிக்கொண்டே
இருந்தன
பொறுக்கிகொண்டே திரிந்த
எங்களுக்கு
பொருளாதார சுமைகள்
ஏதுமில்லை
123
நதியிலோடும்
நீரை
கையில் அள்ளினேன்
வழிந்தோடுகிறது
காலம்...
124
புகைபடிந்த
அடுப்பங்கரையிலிருந்து
இறுதிவரை
மீட்கவே
முடியவில்லை
இரப்பைகளில்
இருள் படியாமல்
உணவு வெளிச்சம்
பாய்ச்சி சென்ற தாயாரை...
125
வைகையாற்றின்
வெள்ளப்பெருக்கில்
நீந்தி கரை
சேர்ந்தவள் என
வெள்ளந்தியாய்
கதை சொல்வாள் அம்மா
வாழ்வெனும்
பெருவெள்ளத்தில் மூழ்கி
போனதறியாது...
126
ஒரு துளி கண்ணீரை
திருகிவிட்டு
போய்விடுகிறார்கள்
அது பெரும் கடலாகி
வாழ்வையே
மூழ்கடித்துவிடுகிறது
126
கோடரியால்
வீழ்த்தப்பட்ட
மரத்திற்கு
துளிர்களால்
ஆறுதல் பூசுகிறது
வேர்....
127
யானைகள்
உலா போன வாழிடங்களை
குழிதோண்டி
புதைத்து
தார்ச்சாலைகளான
சமாதிகளை எழுப்பி
மலர்கள் தூவ மரங்களை
நட்டுவைத்திருக்கிறார்கள்...
128
ஆற்றங்கரையோர
ஆக்கிரமிப்புகள் அகற்றும்
அதிகாரத்தின்
கரங்கள்
எளியோரை
வேரோடு
புடுங்குகின்றன
வலியோரின் பாதங்களை
நாவால் நக்கி பிழைக்கின்றன...
129
எவரையும்
தூக்கிச் சுமக்காதீர்கள்
அடிமைச் சேவகம்
எஜமானர்களுக்கு
கால்கள் இருப்பதையே
மறக்கடித்துவி.டுகிறது...
130
முகமூடிகளால்
ஆனது உலகு
அகம் மூடியோரே
முகம் மூடுவர்
உள்ளும் புறமும்
ஒப்பனையற்றோரை
காண்பதறிது ...
131
உங்களை நீங்களே
வரைந்து கொள்ளும்
வாழ்வெனும்
சித்திரத்தை
நிறைவு செய்கையில்
நீங்களிருக்கப்போவதில்லை
மதிப்பீடு செய்யும்
பார்வையாளர்
கையிலிருக்கிறது
நீங்கள் வரைந்த
உங்களின் வாழ்வு
132
அம்மாவைப் போல்
நினைவுகூறத்தக்க
எவ்வித அடையாளமற்றுத்தான்
அப்பா
நிழற்படமாய்
உறைந்துபோனார்
நடுத்தர வயதுகளில்தான்
தாயாரின் அன்பினுள்
தகப்பனும் வாழ்ந்திருக்கிறார் என்பது
உறைக்கிறது...
133
விரைந்து செல்லும்
முதிய பயணியின்
மூட்டைக்குள்
இறந்துபோகாத
இளமையின் கனவுகள்
உயிரோடிருக்கலாம்...
134
பசியில்
செத்தவர்களை
படையலிட்டு
கரைந்தழைக்கின்றார்கள்
பாவச்சோறு என்றறிந்து
காதுகேளாதவாறு
மரக்கிளையை இறுக
பற்றி
அமர்ந்திருக்கிறது
கருங்காகமொன்று...
135
உளவறியும்
நிழலை உலகறியும்
சந்தேகச் செவிகள்
எப்போதும்
எதிரியின்
உதடுகளில்
கூர்தீட்டி
வைத்திருக்கும்
தன் காதுகளை நம்பாத
ஆதிமனிதனின்
அற்பத்தொழிலிது
.136
சின்னஞ்சிறு
மின்மினி
பூச்சிகளின் வெளிச்சத்தை
களவாடும்
இணைய உலகின்
சூதறியாது
சிறகிழக்கும்
சிறார்கள்
|37
உலையிலிடப்படும்
அரிசி கூட
பானையிலிட்டால்
பொங்கி வழிகிறது
குக்கரில் வைத்தால்
விசிலடித்து அலறுகிறது
எரிபொருள்
விலையேற்றங்கள்
வாழ்வையே எரித்தாலும்
அதிகாரத்திற்கு முன்
ஊமையாகவே உலவுகிறீர்கள்
நீங்கள் எழுப்பும்
கேள்வியில் இருக்கிறது
உங்களின் விடுதலை
138
துயர்களின்
மீதேறி ஊர்கிறது
வாழ்வெனும் பெருநகரம்
படரும்
பசுங்கொடிகள்
நொடிப்பொழுதில்
மடிவதறியாது
வேடிக்கை காணும்
பெரும் கூட்டம்
காட்சிப் பிழை...
139
வன மென
மக்களின் கோபம்
அணிதிரள்கையில்
காடுகளை தின்று
செரித்தவர்களை
யானையின் வாயிலிடப்பட்ட
புற்களாய்
அரைபடலாம்...
140
வானை அளப்பதற்கு
பறவையின் சிறகுகளே
போதுமானதாயிருக்கிறது.
141
கணநேரத்தில்
கைதவறிவிடுகிறதுவாழ்வு
எந்த ஆறுதலும்
மீண்டெழப்போதுமானதாக
இருப்பதில்லை
காலம் ஏதேனும்
அதிசயங்களை
ஏற்படுத்தினாலன்றி
எவராலும்
காயங்களிலிருந்து
விடுபடுதல்
சாத்தியமன்று...
142
உருவமற்ற
உணர்வெளியாய்
நம் கண்ணீரிலும்
புன்னகையிலும்
தோள்மீது கைவைத்து
ஆற்றுப்படுத்துகின்ற
காற்றலைக்கு
அன்பு
வாழ்த்துக்களை
எந்த குயிலும்
பாடி விடுவதில்லை
143
வரைந்து முடிக்காத
ஓவியங்களாகத்தான்
மண்ணில்
உலவுகிறார்கள்
மனிதர்கள்
நீங்கள் எவ்வளவு
முயன்றாலும்
அவர்கள்
மறுபக்கத்தை
வரைந்துவிட முடியாது...
144
எல்லோரிடத்தும்
அணிந்து கொள்ள
முகமூடிகள்
இருக்கின்றன
நீங்கள்
என்னவாக நடிக்கப்போகிறீர்கள்
என்பது
எதிரே அணிந்து
வருபவர்
முகத்திலிருக்கிறது...
145
மாமன்னரிடம்
புன்னகை இருக்கின்றது
மக்களிடம்
கண்ணீர்
இருக்கின்றது
எல்லோரின் சட்டை பைகளிலும்
நமுத்துப்போன
தீக்குச்சிகள் இருக்கின்றன
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
எப்போதும்
அமைதியில்
உறைந்திருப்பதில்லை
சரித்திரம் சர்வாதிகாரிகளை
நஞ்சருந்தித்தான்
கொல்கிறது...
146
மேய்ப்பனை நம்பி
பயணிக்கும்
மந்தை ஆடுகளுக்கு
எப்போதும்
துரோகமே செய்கிறான்
கசாப்பு கடை தாண்டி
அவன் கால்கள்
செல்வதில்லை
தலைநிமிரா ஆடுகள்
வாழ்வதுமில்லை...
147
காலப் பேரேட்டில்
உங்களின் பாத்திரம்
எத்தனாவது பக்கத்தில்
முடியப்போகிறது என்பது
உங்களுக்கே
தெரியாது என்பதுதான்
வாசிக்கும்
வாழ்வின்
சுவாரசியம்
148
ஒரு
தேநீர் கோப்பையின்
எந்த மிடறுகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது
உயிர்களின் வாழ்வு...
149
நள்ளிரவில்
ஊளையிடும் நாயகள்
ஊரின் மரணங்களை அறிவிக்கும்
கால தூதன் என்பார்கள்
இரவு உரையாற்றும்
பேரரசரும்
பெரும்
பீதியூட்டுகிறார்...
150
சொற்களுக்குள்
தொலைந்துபோனவர்களை
காலம் மீட்டெடுத்து
ஆழ்கடல்
முத்துக்களை
கையில் அள்ளி
தந்துவிடுகிறது..
151
எவரும்
மூச்சை நிறுத்திவிடாதீர்கள்
ஊழியின் காலம்
முடியும்வரை
நமது காலம்
முடிவுறாதிருக்கட்டும்...
152
ஒற்றை மீனுக்காய்
தவமிருக்கும் கொக்குகள்
குளமெங்கும்
செத்து மிதக்கும்
பிணங்கள் கண்டு
திகைத்து
நிற்கின்றன..
153
உயிர்காக்கும்
வாயுக்களை
திருடி
விற்கிறார்கள்
தடுப்பூசிகளை
கள்ளச்சந்தையின் விலையேற்றுகிறார்கள்
பெருந்தொற்றால்
மரணித்து கிடக்கும்
உடல்கள்
மயானங்களில்
விரைத்து கிடக்கின்றன
பொதுமக்களின் வாதை
ஆள்வோர்களுக்கான
பெரும்
போதையாயிருக்கிறது
இரவு நேர உரைகளாவது
கோமாளிகளை போல
குதூகலமூட்டுவார்களென்றால்
அங்கேயும்
நஞ்சூற்றித்
தருகிறார்
நம் பேரரசர்
154
புலம்பெயர்வோரின்
கண்ணீரால்
ததும்புகிறது
ஆழ்கடல்
கரையோரத்தில்
ஈரவிழிகளுடன்
வழியனுப்புகிறது
ஊமைச்செந்நாய்...
155
யாரோ இருவர்
பேசிச் சென்ற
ஞாபகங்களிலிருந்து
மீண்டெழ முடியாமல்
அமர்ந்திருக்கிறது
காலத்தின் நாற்காலி...
156
வளைந்தாடும்
சாலைகளில்
நெளிந்தாடும் மழைத்துளிகளில்
உயிர் நனைய அமர்ந்திருப்பதும்
ஓர் தவமே...
157
ஊர்க்கறைகளை
ஆற்றங்கரை தனில்
அடித்து துவைப்போரின்
வாழ்வு என்றுமே வெளுத்ததில்லை
158
கடவுளின் வாசலில்
ஏழைகள்
திருவோடு
ஏந்துகிறார்கள்
எல்லாம் வல்ல
இறைவனின்
பெருங்கருணை
யாசகத் தட்டினில் விழும்
சில்லறை சத்தத்தை
இசைப்பது மட்டுமே...
159
கற்சிலைகள்
உயிர்பெற்று வருமளவு
மனமுருகி
வேண்டுகிறார்
தன்னிலை மறந்த
பக்தையொருத்தி...
160
அன்பே
உங்களது
ஆயுதமென்றால்
அங்குசங்களின்றி
யானை கூட
சேவகம் செய்யத்
துவங்கிவிடும்
161
யானைமீதேறி
வண்ணக் குடைபிடித்து
நடமாடும் தேரமர்ந்து
அவனியெங்கும்
பவனி வருபவன்
அரசர்க்கும்
கிட்டாத அணிவகுப்பு
நாடற்ற ராசாவின்
ராஜமரியாதை
162
தனித்திருக்கும்
தேநீர் குவளையொன்று
நிரப்பவியலாத
தன் வெறுமையை
ஒவ்வொரு மிடறுகளாய்
விழுங்கிகொண்டிருக்கும்
163
யாவர்க்கும்
அருள்பாலித்து
மலையேறுகிறார்
கள்ளழகர்
வைகை நதி
சலனமற்று ஓடுகிறது
164
நூலக
அலமாரியிலிருந்து
புலம்பெயர்ந்து
சென்ற புத்தகங்கள்
யாவும்
மீண்டும் தன்
கூடடைவதேயில்லை...
165
பிறர்
தோளேறி
வானேறியவர்கள்
முளைக்கும்
புதிய சிறகுகள்
முதலில்
துண்டிப்பது
தோளேறிய கால்களையே ...
166
புத்தர் மேல்
படுத்துறங்குவதால்
ஆசை துறக்க
வேண்டியதில்லை
எப்போதும்
புலியின் கண்கள்
இரையை நோக்கியே
விழித்திருக்கும்....
167
மனம் நெகிழ்ந்துருகி
காற்றிலாடும்
சக்கரை தீபங்களில்
வேண்டுதல்கள் யாவும்
நம்பிக்கை
சுடர்களாக
ஒளிர்கின்றன.
168
குயில்கள் பாடுவதோடு
நிறுத்தி கொள்கின்றன
கழுதைகள் மட்டுமே
சுரம் பிரித்து
கனைத்து திரிகின்றன .
169
ஆசை துறக்காத
சிற்பியின் உளிகள்
பேராசையோடு
பெருங்கல்லில்
வடித்திருக்கிறது
போதிமரப் புத்தனை
170
சாமிகளை சுமந்தபடி
நகர வீதிகளை
வலம் வந்த தேர்கள்
நிலைபெறுகின்றன
நம்பிக்கைகளை
சுமந்த
எளியோர்களின் வாழ்வு
காலமெலாம் உருண்டோடுகிறது...
171
கனமழை
கொட்டித் தீர்த்தபின்னும்
ஈரமிக்க இலைகள்
கண்ணீர் சிந்துவதை
நிறுத்துவதேயில்லை...
172
நள்ளிரவு பயணத்தில்
மிகசன்னமாக எழும்
ரகசிய உரையாடலில்
எதிர்முனையின்
உடைந்தழும்
வேதனை குரலினை
கேட்க நேர்வது
இவ்விருளின்
இருண்மையை
அடர்த்தியாக்கி
செல்கிறது..
173
மனசெங்கும்
மயிற்பீலிகள்
நிரம்பிவழிகையில்
உங்கள் தூரிகையால்
ஒரு வண்ணக் சிறகினை வரைந்து
வானத்தில்
சிறகடிக்கவிடமுடியாது...
174
வெடித்தழும்
மழை மேகங்களுள்
யாரும் அறியாதவாறு
கரைந்தழுகிறார்கள்
பகிர முடியாத
துன்பக்கேணிகளை
சுமந்தலைபவர்கள்...
175
காற்றிலிருந்து
நூல் பிரித்து
சிலந்திகள் செய்யும்
சித்திர வலையில்
சிக்கிய மானுடர்
கண்கள்
பசையாய் ஒட்டிகொள்கிறது...
176
கசாப்புகாரன்
மிகலாவகமாக
அணிதிரட்டிவிடுகிறான்
ஆட்டிடையனின்
குச்சிகளே
குறுவாளாக
மாறுவதறியாத
.மந்தையாடுகள்
தழைதின்று தலை இழக்கின்றன...
177
சாலைகளில்
காலியான மதுப்
புட்டிகளை
வீசியெறிந்து செல்கிறான்
உடைந்து சிதறும்
கண்ணாடி சில்லுகள்
பிரதிபலிக்கின்றது
அவனது வாழ்வின்
குரூரத்தை...
178
வாழ்வின்
போக்கறிந்தவர்கள்
பறவையின் இறகைவிட
மென்மையாகிவிடுகிறார்கள்
கண்களில் உதிரும்
ஈரத் துளிகளாய்
நதியலைகளையும்
சுண்டியெறியும்
திறனறிந்தவர்கள்
வாழ்வையே தவமாக்கும்
நீர்ப்புத்தர்கள்
179
இசை பட
வாழ்ந்தென்ன பயன்
காலத்தோடு
பயணிக்காவிடில்
பழங் குப்பையென
தூக்கியெறியும் உலகு...
180
ஒரு வாய் உணவு
உயிரே விலையானது
தூண்டில் மீன்...
181
நெடுந்தூரம்
நீந்தி வந்த களைப்பில்
நுரைதள்ளப்படுத்திருக்கிறது
அலையாடுங்கடல்
182
முகமூடிகள்
கழன்று விழும்
காலங்களில்
முகமொரு முகமூடியாய்
உடைந்து
நொறுங்கத்துவங்குகிறது
183
நத்தையென
நகரும் வாழ்வில்
தலைசாய்த்து
நிழலில் ஒதுங்க
காளான்களாய்
வசந்தங்கள் குடைபிடித்து
நிற்கும் தருணங்கள்
வாழ்வின்
அற்புதங்களுள் ஒன்று
184
உறைந்து கிடக்கும்
நதியை
உயிர்ப்பித்திட
சலங்கை கட்டிய மீன்களாய்
குதித்தாடுகிறார்கள்
துள்ளியோடும்
ஆற்று நீரெங்கும்
வெள்ளிச் சலங்கைகள்
இசை மீட்டுகின்றன...
185
பிடிமானமற்று
அந்தரத்தில்
ஊஞ்சல் ஆடும்
வாழ்வு நேரிடினும்
வைராக்கியமான
வேர்களால் மட்டுமே
வலிமையுடன்
எதிர்கொள்ள
முடிகிறது..
186
திருவிழா
பார்க்க போகும்
அப்பாவி சனங்கள்
சப்பரத்தில் ஏறிவரும்
சாமிகள்
ஒரு நாளும்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை
ஏழை வாழ்வும் பூத்ததில்லை...
187
தெருத்தெருவாய்
சிறுவர்களை
தேடியலையும்
ஐஸ்வண்டிகாரர்களின் வாழ்வு
கால வெப்பத்தில்
கரைந்தோடிப்போனது...
188
வாழ்ந்து
முடித்ததற்கான
சுயசரிதையை
வாழ்வு
எழுதிவிட்டது
மீதமிருக்கும்
நினைவு குறிப்புகளை
விரல்கள் நடுங்க
எழுதிக்
கொண்டிருக்கிறார்
காலத்தை துய்த்தவர்...
189
கூரிய பாறை கற்களை
முனை மழுங்கச்செய்துவிட்டு
சலனமற்ற
புன்னகையோடு
நகர்கிறது நதி...
190
நீங்கள்
விரும்பாவிடினும்
உங்கள் மீது
பாரங்கள்
ஏறத்துவங்கிவிடுகின்றன
கூனலற்ற வாழ்வை தேட
சுமைகளை
கையாள்வதில்
இருக்கிறது
உங்களின் வலிமை.
191
மூளையை
கழற்றி வைத்து
இரவு உறங்கத்துவங்குகிறது
தனித்தொரு
உலகமைத்து
நம்பவியலா காட்சிகளுடன்
களி நடனம் ஆடி
இரவைத் துய்க்கிறது
நிறைவேறாத ஆசைச்
சட்டைகள்
அத்தனையும் அணிந்து
ஒரு பாம்பை போல்
உரித்துப்போடுகிறது
பிணமாய் படுத்துறங்கும்.
நமக்குள் ஊடுறுவி
கனவுள் நடத்தும்
நாடகங்கள் யாவும்
நினைவுகளால்
நிகழ்த்திபார்க்க முடியாதவை
கனவுகளை
பிரதியெடுக்க
முடிந்தால்
உலகின்
ஆகச்சிறந்த
இலக்கியமாய்
மாறக்கூடும்...
192
புலம்பெயர்வென்பது
கொடுந்துயர்
வசித்த ஞாபகங்களின்
பிடிங்கிய வேரை
அயலகங்களில்
கிளைபரப்ப இயலாமல்
வாழ்நாளெலாம் சுமந்தலைவது
காலத்துயர்
193
கடுங்கோடையில்
சிட்டுக்குருவிகளின் தாகத்திற்கு
கசிந்துருகி
கண்ணீர் வடிக்கும்
தெருக் குழாயில்
தன் அலகுகளால் நீர் பருகும்
பறவையொன்று...
194
.வண்ணக் குடைகளேந்தி
மழைப்பயணம்
போகின்றவர்களை
நீரில் கரைத்து விளையாடுகிறது
செம்புயலெனப் பெய்யும்
குறும்பு மழை...
195
தேவதைகள்
ஏந்தி வரும்
வெளிச்சத்தில்
தகப்பன்களின் வாழ்வு
சுடர்விடுகின்றது...
196
மழலைகளின்
குழந்தை பருவம் உரித்து
பட்டாம்பூச்சிகளாய்
பறக்கத்துவங்குகையில்
தகப்பன்களின்
இளமை சிறகுகள்
உதிரத்துவங்குகின்றன.
197
உதிர்ந்த பிறகும்
அழகுபெறும்
ஒரு சில பூக்களாய்
இறந்தபிறகே
உயிர்பெறுகிறார்கள்
ஒருசில கவிஞர்கள்...
198
கடவுளோடு
யுத்தம்
செய்துகொண்டிருந்தாய்
பாமர சனங்களின்
வாழ்வியல் இருட்டை
துடைக்க வந்தசாமி நீ
உனை சாத்தானாய்
திட்டி தீர்த்துக்கொண்டிருந்தன
வேதங்கள்...
199
ஒரு மழைநாளில்
கிழிசல் குடைக்குள்
ஒடுங்கிய குழந்தைகளுக்கு
எவரும் சொல்லாமலே புரிந்திருக்கிறது
சமத்துவமே உலகமென்று...
200
ஒரு
சிறந்த தூரிகையால் மட்டுமே
விழிகளுக்குள்ளிருந்து
அழகிய ஓவியங்களை
பெயர்த்தெடுக்க முடிகின்றது...
201
பாபரை புதைத்த
ராமரின் கருவறையிலிருந்து
ஒலிக்கும்
மந்திரங்களை மீறி
சன்னமாய் எழுகின்றது
தொழுகையின் விசும்பொலி...
202
கடன்காரன்
வீசியெறியும்
துர்நாற்றமிகும்சொற்கள்
மிதந்தலையும்
மேகங்களுள் புகுந்து
தேம்பியழுகின்றது...
203
நள்ளிரவில்
ஓடிப்போன
மகளின் எதிர்காலம்
எண்ணியும்
விடிந்தால்
எதிர்கொள்ளப்போகும்
ஊரின் கேள்விகள் குறித்தும்
இரவை நீளச்
செய்யும்
ஒடுங்கிகிடக்கிறாள்
விதவைத் தாயொருத்தி...
204
உலகின்
எல்லாத்
தெய்வங்களையும் நம்பினாள்
கடவுள்கள் யாவரும்
கேளாக் காதினராகவே
இருந்தன
வற்றிய குளமென்று
வருந்தினாலுமில்லை
வளமுற்ற வைகையென்று
மகிழ்ந்தாளுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக