அப்பாவின் குதிரை
நூல் அறிமுகம்
அப்பாவின் குதிரை
ஆசிரியர்
கவிஞர் ஸ்ரீதர் பாரதி
பக்கம்100
விலை 100
வெளியீடு
நியூஸ்மேன் பப்ளிகேஷன்
மிகச்சமீபத்தில்தான் அறிமுகமானார் கவிஞர் ஸ்ரீதர் பாரதி. இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். 5 ஆவதாக மதுரை புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களால் அப்பாவின் குதிரை எனும் இக்கவிதை நூல் வெளியிடப்பட்டது. வாங்கி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நல்ல கவிதை ஞானமும் சொற்களை லாவகமாக பயன்படுத்தும் திறமைமிக்கவராக மிளிர்கிறார். ஒரு கவிதைகூட பிசிரடிக்கவில்லை அத்தனை நுணுக்கமாக மொழியை கையாண்டிருக்கிறார். ஆனந்தவிகடனில் இவரது கதையும் கவிதையும் வெளிவந்திருப்பதாக சொன்னார். மோதிரக் கையால் குட்டுப்பட்டிருக்கிறார். இதில் நாமென்ன புதிதாய் உரசிப் பார்ப்பது இருந்தாலும் உரசினேன். அத்தனையும் சொக்கத் தங்கம். ஒரு வாசிப்பாளனுக்கு இதைவிட வேறென்ன கடமை வாசகர்களுடன் தங்கத்துகள்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அப்பாவின் குதிரை தலைப்பே வசீகரமாய் இருந்தது. இன்றைய தலைமுறைகளுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் நடுத்தரமான வீடுகளில் மரக்குதிரை இருக்கும். அதில் ஏறித்தான் குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டிருக்கும். ஏழை எளிய வீடுகளில் அதற்கும் வாய்ப்பில்லை. தாத்தா ஏறி, அப்பா விளையாண்டு, மகன் ஒட்டி, இப்போது பேரனும் ஆடிக்கொண்டிருக்கும் காலத்தின் சங்கிலித் தொடர்ச்சியை மிக அழகாக கவியாக்கம் செய்திருக்கிறார்.
"பின்னொரு நாள்
அப்பாவின் பேத்தி
ராணி மங்கம்மாளாகி
மதுரை மாநகரை
அதிவேகமாய் வலம் வந்தபோது
முன்னங்கால்கள் முறிபட்டு
மூச்சுத்திணறி மயங்கி சரிந்து
நலம்பெற்று மீண்டு வந்தது"
நான்காம் தலைமுறையின் நகர்வலத்தை மிக அழகாய் காட்சிபடுத்தியுள்ளார். அட்டைப்படமே குதிரையிலேறிய சிறுவனின் பால்ய படமாக அழகாக அச்சிட்டுள்ளார். ஒரு வேளை கவிஞரின் இளவயது படமாக இருக்கலாம்.
ஒரு நகரம் விரிவாக்கம் செய்யப்படும்போது,
கிராமங்கள் முற்றாக அழித்தொழிக்கப்படுகிறது சனங்களே
சாகும் போது சாமிகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா முதலாளித்துவம் சொகுசு வண்டிகளில் பயணிக்கும் பொருட்டு, ஏழைகள் வீடு நிலங்களை மட்டும் இழப்பதில்லை. தங்கள் நம்பிக்கைகுரிய சாமிகளும் நிலை குலைந்துபோய்விடுகின்றார்கள். என்பதை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறார் இக்கவிதையில்.
"எட்டுவழிச்சாலைக்காய்
இடம்விட்டு இடம்பெயர்ந்ததில்
கையொடிந்தான் காவல்காரன்
காலொடிந்தது வெண்புரவி
கழுத்தொடிந்தது வேட்டைநாய்
மனசொடிந்து சுக்குச் சுக்காய்
நொருங்கிப் போனார்
அய்யனார்"
குளங்களும் கண்மாய்களும் அருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில். கிராமத்து சிறுவர்களுக்கே இம்மாதிரியான அனுபவங்கள் வாய்க்குமா என்று தெரியவில்லை. மீன் தொட்டிகளில் வாசனையற்ற வண்ண மீன்கள் வளர்க்கும் நகரத்து சிறுவர்களுக்கு தூண்டிலும், அதில் வந்து சிக்கும் மீன்களும் நிச்சயம் புதுமையான அனுபவமாகவே இருக்கும். பொதுவாக மீன்களை நாற்றமடிக்கும் என்று தான் கூறுவார்கள். ஆனால் கவிஞரோ கமகமக்கிறது என்கிறார். இவரின் கிராமத்து சொல்லாட்சியே மண் மணத்துக் கிடக்கிறது அதையும் வாசியுங்கள்.
"தூண்டிலோடு
கண்மாய்க்கு சென்ற சிறுவர்கள்
ஓலைப்பெட்டி நிறைய
ஜலபுஷ்பம்
பறித்து வந்தார்கள்
வழியெங்கும்
கமகமக்க "
நகரம் தொலைத்த மனிதர்களில் குடுகுடுப்பைக்காரர்களும் ஒருவர். கிராமங்கள் நகரங்களாய் திரிந்துபோனதில் உதிர்ந்து போனவர்களில் முக்கியமானவர்கள். நல்வாக்கு நாயகர்கள். மனிதக் கூட்டம் எவரிடமிருந்தாவது நற்சொல் கேட்டுவிட மாட்டோமா என்று தவதாயப்பட்டுக்கொண்டிருக்கிறது. நள்ளிரவில் நாய்களின் குரைப்பொலிகளுக்கு நடுவில் காதைக் கூர்தீட்டி வைத்துக்கொண்டிருக்கும் ஏழைகளின் நம்பிக்கைச் சொல்லர்கள். அவர்களுக்கான நல்லதொரு சொல்லை காரிருளில் கிராமத்து வீதிகளில் தேடிக்கொண்டிருப்பதை வேதனையோடு சொல்லிச் செல்கிறார் கவிஞர் இப்படி.
"முன்னிரவில்
தேரடித்தெரு
பின்னிரவில்
கோடாங்கி தோப்புத் தெரு
அதிகாலையில்
படப் படித்தெரு
தெருத்தெருவாய்
தேடியலைகிறான்
குடுகுடுப்பைக்காரன்
தனக்கொரு
நல்ல காலத்தை"
இப்படி தொகுப்பு முழுவதும் மக்கள் யதார்த்தத்தை கவிதைகளால் காட்சிப்படுத்தியுள்ளார்.
குறைகளும் இல்லாமல் இல்லை. அதிகம் பேசப்பட்ட பாடுபொருள்களை
மீண்டும் புதிய வரிகளில் பாடியுள்ளார். என்னதான் புதிய சொல்லாட்சிகள் இருந்தாலும் பழமையான
கருப்பொருள்களால் கவனம் பெறாமல் போய்விடும் அபாயமிருக்கின்றன. எதிர்காலத்தில் கவிஞர்
தவிர்க்கலாம். தொகுப்பை வாங்கிப் படியுங்கள். புதியதொரு அனுபவத்தை கண்டடைவீர்கள். நல்லதொரு சாட்சியாக கவிஞர் பழநிபாரதி அணிந்துரை எழுதியுள்ளார். அப்பாவின் குதிரையேறி உலகெங்கும் வலம்வரட்டும் கவிஞர் ஸ்ரீதர் பாரதியின் கவிதைகள் தோழருக்கு வாழ்த்துக்கள்.
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089
ctamilraj@gmail.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக